Wednesday, July 20, 2016

அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை
                                       க.பிரகாஷ்                    
                                                        தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
                                                        தமிழ்த்துறை
                                                        பாரதியார் பல்கலைக்கழகம்
                                                        கோயம்புத்தூர் – 46 
அறம்

     ‘அறு’ என்ற வினைச் சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். அச்சொல்லுக்கு அறுத்துச்சொல், வழியை உண்டாக்கு, எருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்றும் குறிப்பிடுகின்றனர். பின்னர் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு.

நீதி இலக்கியம்

     நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும் கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாமை நிலவியாதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

     “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
      பால்கடுங் கோவை பழமொழி மாமூலம்
      ………………………………………………………………………………………………………………………..
      கைந்நிலைய வாய் கீழ்க் கணக்கு

     நீதி இலக்கியங்களில் குறிப்பிடும் இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரகோவை, நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார், திருக்குறள் ஆகிய பதினொரு நூல்களிலும் கல்வி பற்றிய செய்திகள் மிகுதியாக காணப்படுகின்றன.

கல்வி பொருள்

     மனிதன் தம்முடைய வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் மரபுகளையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுகிறது. உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளக்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு பொருள் கல்லுதல் என்பதனை தோன்டுதல் கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும், கல்வி என்ற பெயரும் வந்தன. நிலத்தைக் கிளவுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பயன்படுத்துவதாகும் என்கிறார்.
     கற்கும் கல்விக்கு பல பொருள் : அறிவு, கற்றல், நூல், வித்தை, பயிற்சி, உறுதி, ஊதியம், ஏதி, காரணம், கலை, கேள்வி, கால்பு, தேற்சி, விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.

நாலடியார் கூறும் கல்விச் சிந்தனை

     “ குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
      ………………………………………………………………………………………………………………………………
      ……………………………………………………………….. நடுவ நிலைமையால்
      கல்வி அழகே அழகு.”

     நல்ல மணம் வீசும் கூந்தலுடைய அழகும், மேனி ஜொலி ஜொலிக்க உடுத்திய ஆடை அழகும், அள்ளிப்பூ அழகு செய்த ஒப்பனையுடைய மஞ்சள் நிறத்தழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது.
     உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும்.

     “கல்வியில கரையில கற்பவர் நாள்சில
      மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதன்
      …………………………………………………………………………………………………………………………..
      பாலுண் குருசின் தெரிந்து” – (நால 1)

கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகு அளவு, கல்விக்குக் கரையும் இல்லை, கற்றுத் தெரிந்து கொள்வதற்கு ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது. அவ்வளவு நிறைந்து இந்த மிகக் குறைந்த வாழ்நாளில் இடையிடையே மெல்ல மெல்ல வந்து தாக்கும் நோய்கள் ஒருபுறம், மீதம் இருக்கம் நாட்களில் வாழ்க்கையைப் பயனுடையதாகத் தேர்ந்து தெளிந்த நல்ல நூல்களைக் கற்றிட வேண்டும்.

      பாலும், நீரும் கலந்திருக்கும் பாத்திரத்தில் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

     “………………………….. யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
      நல்லறிவு நாளுந் தலைப்படுவர் …………………………………………….
      ……………………………………………………………………….. சேர்தலாற் புத்தோடு”

     படிப்புக்கு வசதியில்லாததால் படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால் அவர்களுக்கு அந்தப் பெரியோர் சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சம் நல்ல அறிவு கிடைக்கப் பெறுவார்கள்.

கடிகையில் கல்வி

     “கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
      ………………………………………………………………………………………………………
      ……………. உயர்ந்த எலகம் புகும்”.

     ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமை குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான் அவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வான் அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.

     “ ……………………………………………………………………………. ஒருவற்குக்
      கற்றலின் வாய்த்த பிற இல்லை என்றுள்ளும்
      ………………………………………………………………………………………………………………….
      …………………………………………………………………………… இல்”.      - 32

     செல்வத்தைப் போல ஒருவறுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போலத் துணையாவது, பிறிதில்லை, வறுமையைப் போலத் துன்பம் தரக்கூடியது வேறு எதுவுமில்லை கொடுப்பதைப் போலத் திட்பமானது வேறு இல்லை.

     “………………………………………………………… காதலர் கண்ணோடார்
      ………………………………………………………………………………………………………………………………...
      உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புரையும்
      ……………………………………… புல்லறிவினார்”. – 58

கற்றவரோடு விரும்பி வாழ்பவர் கற்றவரேயாவர். கண்ணோட்டம் இல்லாதவர் இடம் செய்பவரை ஒப்பர். எவற்றையும் மறைக்காமல் உண்மையை உள்ளபடியே கூறாதவர் பகைவரே ஆவார் சிற்றறிவினையுடையவர் யாம்பும் புற்றுக்கு ஒப்பாவர்.

     “ கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
      ………………………………………………………………………………………………………………..
      நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
      ………………………………………………………….. பகை”.

கொடுந்துன்பங்கள் வருதலால் எப்பொழுதும் பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தகுதியுடைய நல்ல ஒழுக்கச் செயல்களை நீக்காதிருக்க வேண்டும். சிற்றினத்தரோடு சேராதிருத்தல் வேண்டும் எவரிடத்தும் பகைமை கொள்ளாதிருத்தல் வேண்டும்.

திரிகடுகம் கூறும் கல்வி

     விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும் வகையில் கல்வி பற்றி சில சிந்தனைகள் சிதறுக்கின்றது.

     “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
      ……………………………………………………………………………………………………………………………………
      நன்மை பயத்தல் இல”. – 10

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும் பருத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் ஆகியனைத்தும் மாறாகத் தீமைகளையே உண்டாக்கும்.

     “நுண்மொழி நோக்கில் பொருள் கொளலும் நூற்கேலா
      …………………………………………………………………………………………………………………………………………………………
      கற்றறிந்தார் புண்ட கடன்”. – 32

     நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும் நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும் நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும்.

     சொற்போக்குக்கு ஏற்ப பொருள் கொள்ளல் பயனற்ற சொற்கள் கூறாதிருத்தல் நல்ல நூற்கருத்துக்களை விரும்புவர்க்கு கற்பித்தல் ஆகிய மூன்றும் கற்றறிந்தார் கடமைகள் ஆகும் என்பது கருத்தாகும்.

சிறுபஞ்சமூலம் கூறும் கல்வி

     “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
      ……………………………………………………………………………………………
      துன்ப மிலேம் பண்டுயாமே வனப்புடையேம்    - 20

அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பு. முதுமை வருவதற்கு முன்னே பொருள் தேடிவைத்துக் கொள்ளாதவர்கள் அறிவிலார் ஆவார்கள். முன்பு பொருளுடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம். அப்பொழுது யாமே அழகுடையவராக இருந்தோம் என்று கூறிக்கொள்கின்றவர் இருகால் எருதுகளுக்கு நிகராவர்கள்.

     “……………………………………………………………… எல்லாம் யாதொன்றும்
      …………………………………………………………………………………………………………………………………..
      குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்” – 31

எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை.

     “ சத்தமெய்ற் ஞானம் தருக்கம் சமயமே
      …………………………………………………………………………………… அத்தகத்து” – 86

வழக்காகிய இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடு பேனைப் பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.

ஆசாரம் கூறும் கல்வி

     “தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
      முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க …………………………
      ……………………………………………………………………………………………………………… கெடும்”.

ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல் யாகம் செய்தல் தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது. விளங்குமாறு பாதுகாத்துச் செய்க. மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் தனக்குப் பயன்படாமல் போகும்.

ஏலாதி கூறும் கல்வி

     “ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
      பேணொடு எண்ணும் எழுத்திவை …………
      ……………………………………………………….............................................
      வேட்டெழுத வாழ்வார் விரிந்து.

இப்பிறப்பில் அறிஞர்கள் தனது வரலாற்றை விரும்பி எழுத வாழ்வு பெருகி வாழ்கின்றவர்கள் விருப்பத்தோடும் நற்குண நற்செயல்களோடும் எண்ணும் எழுத்துமாகிய கல்வியை ஆசிரியர்களிடத்தில் பாடம் கேட்டும் ஏட்டில் எழுதியும் படித்தும் வாழ்கின்ற தலைசிறந்த மாணாக்கர்களுக்கு முன்பிறப்பில் உணவொடு எடையும் எழுத்தாணியும், புத்தகச் சுவடியும் கொடுத்து உதவினார்களே ஆவர். ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு ஊண், உடை முதலியவற்றைக் கொடுத்துதவுகின்றவர்கள் பெற்று விளங்குவார்கள்.

முதுமொழிக்காஞ்சியில் கல்வி

     “கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று”.
                                           – சிறந்த பத்து

அரிய உண்மைகளைக் கற்றலை விட கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்றார் வழி நிற்பவர்க்குக் கற்றலின் பயன் எளிதில் கைகூடுமாகலின் வழிபடுதல் சிறந்ததாயிற்று என்க.

கற்றது உடைமை

     “கற்றது உடைமை காட்சியின் அறிய”.
                                     – அறிவுப் பத்து
     கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர்.

கற்றது கல்வி

     “நேராமல் கற்றது கல்வி யன்று”.
                                     – அல்ல பத்து

கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்க.

திருக்குறளில் கல்வி

     “கற்க கசடறக் கற்பவை கற்றபின் – 391

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

     “ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவள்”  - 398

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
     பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பிடும் பதினொரு அற நூல்களும் ஒரு மனிதனுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், தூங்கி கொண்டிருப்பவனை எழுப்பும் வகையிலும், சோர்ந்திருப்பவனை சுறு சுறுப்படையவும், விழுந்தவனை எழுந்து நிற்க வைக்கும் அளவிற்கும், விருந்தினருக்கு விருந்தோம்பலாகவும் இவ்வகை இலக்கியங்கள் சுவைத்தால்      ( பயின்றால்) தெவிட்டாத கருத்துகளாகும்.
     நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள், பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இனியவை நாற்பது, முதுமொழி காஞ்சி என இவ்வகை அற இலக்கியங்களில் மனிதனுக்கு ஒழுக்கத்தை மட்டும் கற்றுகொடுக்காமல் கல்வி என்ற பெயரில் மனித மனதை வழுப்பபடுத்துகிறது. கல்வி என்பது  “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்ற நாலடியாரில் குறிப்பிடுவது போல கல்விக்கு கரையும் மில்லை கற்று தெரிந்து கொள்ளுவதற்கு ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது என்பர்.

பார்வை
1. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 1 – வித்துவான் துரை.                                                இராசாராம்
2. பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – வித்துவான் துரை.                                                இராசாராம்
3.   நாலடியார் நற்சிந்தனைகள் – கே.எம். நாச்சிமுத்து
4.   கௌரா தமிழ் அகராதி
5.   தமிழ் இலக்கிய வரலாறு – பேராசிரியர் மது.ச.விமலானந்தம்