Monday, April 25, 2016

குறுந்தொகையும் - குறிஞ்சியும் - கட்டுரை

குறுந்தொகையும் - குறிஞ்சியும்
     கடல் கோள்களால் அழிவுற்றன போக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக் கூட்டித் திட்டமிட்டு பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைத் தொகுத்துத் தந்தவையாகும். அவை! பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே இன்றைய தமிழ் இலக்கியம் - பண்பாடு நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.
     குறுந்தொகையென்னும் நூலை பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லை முதல் எட்டடிப் பேரெல்லை வரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. இத்தொகைப்பாடல்கள் அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருட்கே சிறப்பிடம் பெற்றுள்ளது.
குறுந்தொகையில் - தலைவன் - தலைவி
     ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற பல அவைமிகுந்த கட்டங்கள் - இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளை யெல்லாம் நயம்பட அமைந்துக் காட்டுகின்றன இக் குறுந்தொகைச் செய்யுட்கள்.
     தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை, தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா் அவை!  - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்ப புறத்திணையும் ஏழு வகையாக குறிப்பிடுகிறார். வெட்சி, வஞ்சி, உழைிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மை தந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.
     அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.
     “அவற்றுள்
      நடுவண் ஐந்திணை நடுண தொழியப்
      படுதிரை வையம் பாத்திய பண்பே” - (948)
எனவும்
     மாயோன்மேய காடுரை உலகமும்
     சேயோன்மேய மைவரை உலகமும்
     வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
     வருணன்மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(951)
என கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இனை திணையென உணரப்படுகிறது. முதல், கரு, உரி என அமைத்துப் புனைவது அகும். முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறு பொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலபாகுபாட்டை குறிக்கும்.
ஐவகை நிலத்தினர்
     குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும் முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும் மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல் நிலை மகளிரே இரங்குவரென்பதும் பாலை நில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலக வாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்க செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்சி செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும் பெருபான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவே இச்செயுட்கள் அமைந்துள்ளன.
திணை
     திணை என்பது ஒழுக்கம் என்று பொருள் படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள், இவை ஐந்தும் இல்வாழ் மக்கள் கடைப்பிடித்து ஒழுக்க முறையே ஆகும்.




குறிஞ்சி

நிலம்                                          பொழுது
மலையும் மலை                  சிறும்            பெரும்
சார்ந்த பகுதி                கூதிர்,யாமம், முன்பனி, பின்பனி
                            
கருப்பொருள்
புலி, யானை, கிளி                      உரிப்பொருள்
மயில், வேங்கை,             புணர்தல் புணர்தலும் நிமித்தமும்
சந்தன மரம், காந்தள்          (திருமணத்திற்கு முந்திய
குறவர், வேட்டையாடல்        களவு வாழ்க்கை)

தொகையும் குறிஞ்சியும்
     “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
      காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” - (படல் -  2)
இயைற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய் தொட்டுப் பயிற்ல முதலியின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி தனது அன்புத் தோன்றும் நலம் பாராட்டியது.
     இறையனர் என்பது இங்கு சிவபெருமானைத் குறிக்கும் இப்பாடல் சிவபெருமான் ஒரு புலவராய்த் தோனிறி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடப்பட்டது.
     மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டு வாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையம் வரிசையாய்ச் செறிந்துள்ள நறுமணம் போன்றதொரு ஒப்பற்ற மணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ பல மலா்கள் தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ எனக்கின்பமான ஒன்றைத் கூறாது நீ துய்த்து அருந்த மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.
தலைமகன் மொழிந்தது.
     “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
      நீரினும் ஆரளவின்றே சாரல்……( பாடல் - 3)
     தலைமகன் சிறைப் புறமாக அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்த இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு மிகுதியான தேனைத் தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப் புதின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது. நினைத்துப் பார்த்ததால் வானைத்தை காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லை காணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.
     பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாதது கழிவது குறித்து தோழி இயற்பழித்த வழி, தலைமகன் அதனை மறுத்து தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள் என நிலத்தினும், வானினும், நீரினும் உயர்வு சிறப்பும்மைகள் பெற்றவன் ஆவான்.
தலைமகன் தோழிக்கச் சொல்லியது.
     “யாரும் இல்லைத் தானே களவன்
     தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்தோ”(பாடல்-25
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைமகன் வரைந்து சொன்னது களவினை நீட்டித்த இடத்து ஆற்றாத தலைகள் தோழி உணா்வார் எவருமிலர். அவன் கூறிய சூளுரையை அவன் பொருய்ப்பின் யான் என் செய்வேன் அவன் மணந்த அன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.
     தலைமகளிடம் அவன் கலந்த நாளில் வேறு எவருமில்லை தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான் அவன் தான் கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று இனையினது தாமறைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரால் மினை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.
     சங்க இலக்கிய நூல்களின் ஒன்றாகவும், பதினென் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகை நூலானது சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும் தலைவன், தலைவி பற்றி செய்திகளை எடுத்து இயம்பக்கூடியவையாக திகழ்கின்றன. இப்பாடல்கள் நிலம், பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், தலைமகள் காதல், வரைவு, களவாடுதல், இயற்கைப் புணா்ச்சி போன்ற செய்திகளை எடுத்து விளக்குவதாக குறுந்தொகை அமைகின்றன.



பார்வை நூல்கள்
Ø  குறுந்தொகை - புலவா் துரை இராசாராம்
Øகுறுந்தொகை ஒரு நுண்ணாய்வு -மனோன்மணி                                                          சண்முகதாஸ்
Ø  புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல்
Øதமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் -இலக்கிய வித்தகர்                                                      செந்துரையான்

Ø  குறுந்தொகை மூலமும் உரையும் - புலியூர்கேசிகன்

No comments:

Post a Comment